பிளாஸ்டிக் பையில் அழகு பெண் குழந்தை..! புதரில் வீசப்பட்ட கொடுமை


சேலத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை பிளாஸ்டிக் சாக்கு பையில் சுற்றி புதரில் வீசிச்சென்ற கல் நெஞ்சம் படைத்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் அரபிக் கல்லூரி அருகே ஞாயிற்றுகிழமை இரவு குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. அந்தவழியாக சென்றவர்கள் டார்ச் வெளிச்சத்தில் தேடியபோது அங்கு குழந்தை ஏதும் தென்படவில்லை.

பச்சிளம் குழந்தையின் அழுகுரல் நீடித்ததால் ,அந்த வழியாக சென்ற மாதேஸ்வரன் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து தேட தொடங்கி உள்ளார். சத்தம் வந்த புதர் பகுதியில் தேடியபோது மேலே கற்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிளாஸ்டிக் சாக்கு பை ஒன்றில் இருந்து லேசாக அசைவுகள் தென்பட்டுள்ளது.

இதையடுத்து அதன்மேல் இருந்த கற்களை அகற்றிவிட்டு அந்த பையை திறந்து பார்த்த போது, உள்ளே தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கதறி அழுவதைக் கண்டு பதறி போயுள்ளனர்.

உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த 108 பணியாளர்கள் அந்த பிளாஸ்டிக் சாக்குப்பயை கிழித்து குழந்தையை பத்திரமாக மீட்டு சேலம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த அழகான பெண் குழந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணுக்கு, வீட்டில் பிறந்த குழந்தையாக இருக்க வேண்டும் எனவும் அதனால் தான் தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் அப்படியே இருப்பதாகவும், அரசு மருத்துவமனையில் பிறந்திருந்தால் தொப்புள் கொடி அகற்றப்பட்டிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பிஞ்சு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அந்த குழந்தையின் மீது கற்கள் வைக்கப்பட்டிருந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய எக்ஸ்ரே எடுத்து ஆய்வு செய்தனர். அதில் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்று தெரியவந்தது.

தவறான தொடர்பால் பிறந்த குழந்தையாக இருக்கலாம் என்றும், குழந்தையை கொலை செய்யும் நோக்கில் குழந்தையின் உடலில் இருந்து தொப்புள் கொடியை அகற்றாமல் பிளாஸ்டிக் சாக்குப்பையில் போட்டு அதனை சுற்றி அதன் மீது கற்களை வைத்து புதரில் மறைத்து வைத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது போல தனது அழுகுரலால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது அந்த சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தை என்கின்றனர் காவல்துறையினர். மேலும் அந்தக் குழந்தையை கொலை செய்யும் நோக்கோடு அங்கு வைத்துச் சென்றது யார் என்பது குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் குழந்தைகளை வளர்க்க வசதி இல்லாதோர் முறைப்படி அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் காப்பகங்களில் விட்டுச்செல்ல வசதி இருக்கும் போது இது போன்ற விபரீத கொலை முயற்சிகளில் ஈடுபடுவது மனிததன்மையற்ற செயல் என்பதை கல் நெஞ்சம் கொண்ட அந்த பெண் உணரவேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?