மூன்று மாதங்களாக சந்திக்க முடியவில்லை! - பொன்சேகாவிடம் கண்ணீர் விட்ட சந்திரிகா


சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கடந்த மூன்று மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. கடந்த 2 மாதங்களாக தொலைபேசி ஊடாகவும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கண்ணீர் மல்க தன்னிடம் கூறியதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

பிரதேச அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “உள்ளூராட்சி தேர்தல் தோல்வியை அடுத்து கூட்டரசாங்கம் கொந்தளிப்பான காலகட்டத்தை கடந்து வந்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் தோல்வியின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்தை முதலில் தெரிவித்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே. அதன் பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. 

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியுடன் மிக நெருக்கமானவர்கள். பிரதமரை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருந்தார். சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை எனக்கு வழங்க வேண்டுமென ஐ.தே.கட்சி பிரேரித்தது. 

நான் இந்தோனேசியாவுக்கு போவதற்கு முன்பு எனக்கு ஓர் அதிகாரமிக்க அமைச்சுப் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். நான் இந்தோனேசியாவில் இருக்கும் போது எனக்கு ஓர் முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவிருப்பதால் உடனே நாடு திரும்புமாறு ஜனாதிபதியின் பாராளுமன்றச் செயலாளரும், அமைச்சர் ராஜிதவும் எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார்கள். 

நான் உடன் திரும்பி வரவில்லை. சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி பிரதமர் கையில் இருப்பதாக நான் இணையத்தளங்கள் மூலமாக அறிந்தேன். இலங்கை திரும்பியதும் அவ்வமைச்சை எனக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக பிரதமர் என்னிடம் தெரிவித்தார். பின்னர் நான் ஜனாதிபதியைச் சந்தித்து இது பற்றி வினாவிய போது நான் இராணுவத்தில் பணிபுரிந்த காரணத்தினால் எனக்கு பொலிஸ் பணி புரிய முடியாதென சில டிஐஜிக்கள் தெரிவித்ததுடன் சில தேரர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள் என ஜனாதிபதி தெரிவித்தார். 

எனினும் பெயர்களைக் கூற மறுத்துவிட்டார். நான் இராணுவத்தில் பணி புரிந்த போது பொலிஸாருடன் இணைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றேன். 

தற்போதைய பொலிஸ் மா அதிபருடனும் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆகவே ஜனாதிபதியின் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ராஜபக்ச குடும்ப ஆட்சியின் போது செய்யப்பட்ட அனைத்து குற்றங்களையும் மூடி மறைப்பதற்காகச் செய்யப்பட்ட திரிபும் ஏமாற்றமும் தான் மத்திய வங்கி பிணைமுறி மோசடி பற்றிய செய்திகளாகும்.

ராஜபக்சவுக்கு நெருக்கமான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வஞ்சனை, மோசடி பொதுச்சொத்தை வீணடித்தல் மற்றும் பெற்றுக்கொண்ட கமிஷன் ஆகியவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் அது பத்து பில்லியன் ரூபாக்களையும் தாண்டும் என்றார். 

கோத்தபாயவைக் கைது செய்வதற்கு நீதிமன்றம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது குறித்து தனது அதிருப்தியையும் அவர் வெளியிட்டார். நல்லாட்சி அரசின் பின்னடைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இருவருமே பொறுப்பானவர்கள் என மேலும் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

கத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள்? : புதிய சட்டம் அமுல்