கர்நாடக தேர்தலில் பாஜகவின் லாபத்துக்காக தாமதம் : மு.க.ஸ்டாலின்
கர்நாடக தேர்தலில் பாஜகவின் லாபத்துக்காக தமிழகத்தின் காவிரி உரிமையை பாதுகாத்து நீதி வழங்குவதில் செய்து வரும் தாமதம் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குறைப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கி துணை செய்திருப்பது, உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்புக்கே மாறான நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை செயல்படுத்த விடாமல் இதுவரை தடுத்து வரும் மத்திய பாஜக அரசுக்கும், அதனுடன் இணைந்து செயல்பட்ட அதிமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
வரும் 14 ஆம் தேதி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, இறுதி தீர்ப்பின் பலனை தமிழக விவசாயிகள் அனுபவிப்பார்களா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உச்சநீதிமன்றம் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment